கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் போதைக்கு அடிமையான பலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயலும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
இந்நிலையில், தேனாம்பேட்டை திருவிக குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ராஜா (34) என்பவர் சாராயம் காய்ச்சுவது பற்றி, செல்போனில் டிக்டாக் செயலி மூலம் பார்த்துள்ளார். இதுபற்றி ஆட்டோ ஓட்டுநரான தனது நண்பர் ஜார்ஜ் ஜோசப் (31) என்பவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் இணைந்து டிக்டாக்கைப் பார்த்து வெல்லம், கடுக்காய், வெட்டிவேர் ஆகியவற்றை குடத்தில் நீர் ஊற்றி ஊறவைத்துள்ளனர். 3 நாட்கள் ஊற வைத்த பிறகு அதைக் காய்ச்சி எடுத்து இருவரும் குடித்துள்ளனர்.
இந்நிகழ்வு தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ராஜா மற்றும் ஜார்ஜ் ஜோசப்பை பிடித்து விசாரித்தபோது தவறை ஒப்புக்கொண்டனர். இதனால் இருவர் மீதும் ஊரடங்கை மீறுதல், சட்ட விரோதமாக மதுபானம் காய்ச்சுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை ஜாமீனில் அனுப்பினர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவர் கைது!