பல்லாவரத்தையடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுப்பாலம் அருகே உள்ள முள் புதரில் அடித்துக் கொலை செய்துவிட்டு, சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியது.
இக்கொலை தொடர்பாக சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கொலையாளிகளைப் பிடிக்கக் காவலர்கள் சென்றபோது இருவர் மட்டுமே சிக்கினர். மேலும், மூவர் காவல் துறையிடமிருந்து தப்பி ஓடினர். பிடிபட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தப்பியோடிய மூன்று கொலையாளிகளையும் பிடிப்பதற்கு சங்கர் நகர் காவல் ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடிவந்தனர். மூவரில் ஒருவரான குன்றத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (23) செல்போன் நம்பரை இடைமறித்ததில், அவர் திருப்பதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் திருப்பதி சென்று ரவிச்சந்திரனை (23) கைது செய்து பின் சிறையில் அடைத்தனர்.
மேலும், அனகாபுத்தூரைச் சேர்ந்த அஜய் (24) மற்றும் பேரிக்கா என்கிற பிரகாஷ் (26) ஆகிய இரண்டு பேரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இருவரும் திருவள்ளூரில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படையினர் பிடிக்க முயன்றபோது, இருவரும் தப்பிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அஜய் என்பவர் காவல்துறையிடம் பிடிபட்ட நிலையில், மற்றொருவரான பிரகாஷ் மாடியில் இருந்து கீழே குதித்துத் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், கீழே குதித்ததில் பிரகாஷின் கால் உடைந்தது. இதையடுத்து பிரகாஷையும் தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் பல்லாவரம், அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்கும் முக்கியப் புள்ளிகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவர் கொலையில் திடீர் திருப்பம் - மனைவி, மைத்துனரின் கூட்டுச்சதி அம்பலம்