சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த குடும்பத்தின் மருமகள் ஜெயமாலா, அவரது சகோதரர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கார் மற்றும் துப்பாக்கி கொடுத்து உதவிய ஓய்வு பெற்ற ராணுவ அலுவலரும் கைது செய்யப்பட்டார்.
பிடிபட்ட ஜெயமாலா, அவரது சகோதரர்கள் கைலாஷ், விலாஸ் ஆகியோர், தலில் சந்த் குடும்பத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஜெயமாலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கணவர் ஷீத்தல் குடும்பத்தைச் சேர்ந்தோரை காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
ஷீத்தல் குடும்பத்தைச் சேர்ந்த விஜய குமார் என்பவரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். இந்நிலையில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட விஜயகுமார் இன்று (நவம்பர் 24) காலை அவர் தங்கியிருந்த ஆர்கே நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக ஆர்கே நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது செல்போனை ஆய்வு செய்ததில் வீடியோ வாக்குமூலம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், தனது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சோகத்தில் இருந்ததாகவும், கொலை செய்த ஆறு பேரை காவல்துறையினர் விசாரிக்காமல், தன்னையும், தன் உறவினர் ஹேமந்த் என்பவரையும் அடிக்கடி காவல்துறையினர் விசாரணை செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளானதாக வீடியோ வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதற்கு ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் உதவ வேண்டும். நானும், எனது குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் காவல்துறை விசாரணைக்கு பயந்து, உணவு கூட உண்ணாமல் வேதனையில் இருந்தோம். நான் இறந்த பின்பு எனது சொத்துக்களை சகோதரர் ரமேஷ் மற்றும் பெரியப்பாவின் மகன் மகாவீர் ஆகியோருக்கு உயில் எழுதி வைப்பதாகவும், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் விஜயகுமாரின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். தலில் சந்த் குடும்பத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து பிரச்னைக்காக துப்பாக்கிச் சூடு நடந்ததை தொடர்ந்து, உறவினர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செளகார்பேட்டை கொலை வழக்கு - மூன்று பேர் கைது!