ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திர பிரசாத்(18), ஈரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிறன்று நண்பர்களுடன் திரைப்படத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி காலை அவரது வீட்டருகே உடலில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், இறந்த நாகேந்திர பிரசாத்தின் நண்பர்களான சக்கம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்(22), நவநீதகிருஷ்ணன்(22), ஹரிஹரசுதன்(17), பாலாஜி(18) ஆகியோர் முன் பகை காரணமாக இவரைக் கொலை செய்ததது தெரியவந்தது.
நாகேந்திர பிரசாத்த மற்றும் அவரது நண்பர்கள் நால்வரும் மது அருந்திக்கொண்டு இருக்கும்போது, முன் பகை காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டதால் அவரை, கண்ணன் கத்தியால் குத்தியுள்ளார். மற்ற மூன்று பேரும் சேர்ந்து மது பாட்டிலால் அடித்து கொலை செய்ததாக நான்கு பேரும் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கொலைக்குற்றவாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.