திருநெல்வேலி மாவட்ட சுகாதார மையங்களில் மருத்துவ சேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனியார் ஒப்பந்த வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய துணை இயக்குனரின் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள கீழ்நிலை சுகாதார மையங்களில் மருத்துவ சேவை பயன்பாட்டிற்காக ஆர்.பி.எஸ்.கே என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் சுகாதார மையங்களில் மருத்துவ சேவைக்காக தனியார் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் எடுத்து செல்வதற்காக டாடா சுமோ உள்ளிட்ட 10 கார்கள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இந்த 10 கார்களின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
திருநெல்வேலி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வரதராஜ் தான் இந்த வாகன ஒப்பந்தத்தைப் புதுப்பித்து கொடுக்க வேண்டும். இந்நிலையில் வரதராஜின் கார் ஓட்டுநரான சங்கர் வாகனங்களை புதுப்பித்துக் கொடுக்க அதன் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கி வந்துள்ளார். அதன்படி வேலாயுதம் என்பவர் தனது இரண்டு கார்களை ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரத் துறைக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
எனவே வேலாயுதத்திடம் கார் ஒன்றுக்கு தலா பத்தாயிரம் லஞ்சம் கேட்டு துணை இயக்குனரின் ஓட்டுனர் சங்கர் அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத வேலாயுதம் இதுகுறித்து அம்மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய இருபதாயிரம் ரூபாய் பணத்தை வேலாயுதத்திடம் கொடுத்து அதை சங்கரிடம் கொடுக்கும்படி கூறினர்.
அதன்பின் திட்டமிட்டபடி வேலாயுதம், சங்கரைத் தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டபடி இரண்டு வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருகிறேன். உங்களை எங்கே பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுனர் சங்கர் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் வைத்து துணை இயக்குனரின் கார் ஓட்டுநரான சங்கரிடம் இருபதாயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை அவர் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக சங்கரை பிடித்தனர். பிறகு அருகில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சங்கரிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வாகனம் ஒன்றுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என இதுவரை ஏழு வாகன உரிமையாளர்களிடம் 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், துணை இயக்குனர் வரதராஜ் கூறியதால் தான் லஞ்சம் பெற்றதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிப்பதற்காக துணை இயக்குனர் வரதராஜை தொடர்புகொண்டபோது அவர் திண்டுக்கல்லில் இருப்பதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை அவசரமாக திருநெல்வேலி திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையில் லஞ்சம் வாங்கிய ஓட்டுனர் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஓட்டுநர் வாக்குமூலம் அளித்தபடி துணை இயக்குனர் தான் தனது ஓட்டுநர் மூலம் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்று வருகிறாரா? அல்லது ஓட்டுனர் சங்கர் தனிப்பட்ட முறையில் துணை இயக்குனருக்குத் தெரியாமல் லஞ்சம் வாங்கி வந்தாரா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வாடகைக்கு கார் ஒப்பந்தம் எடுப்பதில் அலுவலரின் கார் ஓட்டுனர் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரவாயல் பகுதியில் தொடர் வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது!