தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் தொடர் கொலைகள், குற்றச் சம்பவங்கள் குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகிய 11 கொலை வழக்குகள் தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ள நான்கு கொலைகள் தொடர்பாக 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதில் ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் பதிவாகியுள்ள மூன்று கொலை வழக்குகள் தொடர்பாக 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதில் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொதுமக்களிடம் அவசர உதவி அழைப்பு எண் 100 பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாததும் பெருகும் குற்றங்களுக்குக் காரணமாக உள்ளது. ஆகையால் குற்றச் சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் என்று பொதுமக்கள் உணர்கையில் அவசர எண் 100-யும் "காவலன் செல்ஃபோன் செயலி"யையும் பயன்படுத்தி காவல் துறையினருக்கு தகவல் அளித்தால் பல குற்றங்களைத் தடுக்கலாம்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 200 வாகனங்களில் காவல் துறையினர் இரவு-பகலாக ரோந்துப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
வாகன திருட்டு தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் 40 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வாகன விபத்தின் மூலம் உயிர் இழப்பு ஏற்படுவது 10 விழுக்காடு குறைந்துள்ளது" என்றார்.
இந்நிகழ்வில் காணாமல்போன செல்ஃபோன், திருடப்பட்ட செல்ஃபோன் வழக்குகளில் காவல் துறையினரால் மீட்கப்பட்ட செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படியுங்க:
தூத்துக்குடியில் தொடரும் கொலை சம்பவங்கள் - அதிகாலையில் லாரி டிரைவர் வெட்டிக் கொலை
முன்விரோதம்: டாஸ்மாக்கில் இரட்டைக் கொலை... பெரம்பலூரில் போலீஸ் குவிப்பு!
'ஏம்ப்பா இவ்வளவு ஸ்பீடா வர்றீங்க...!' - தட்டிக்கேட்ட இருவர் வெட்டிக்கொலை