திருப்பூர்: இருசக்கர வாகனத்திற்கு இளைஞர் தீ வைக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சேலம் பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (28). வத்தலகுண்டு அருகே குடும்பப்பட்டியைச் சேர்ந்தவர் சென்றாயன் (30). அண்ணன் தம்பிகளான இருவரும், ராசா கவுண்டம்பாளையத்தில் உள்ள தறிக் கிடங்கில் பணிபுரிந்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் இருவரும் மது அருந்துவிட்டு சண்டை போட்டுக்கொள்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இவ்வேளையில், அக்டோபர் 12ஆம் தேதி ராசா கவுண்டம்பாளையம் சுடுகாட்டில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் இருவருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் சென்றாயன் கணேஷ் மீது தனது இருசக்கர வாகனத்தை விட்டு மோதியுள்ளார்.
இதில் காலில் காயமடைந்த கணேசனை, அவரது நண்பர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். கணேசன் மீது கோபம் அடங்காததால், ராசா கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கணேசனின் இருசக்கர வாகனத்தை சென்றாயன் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இதன் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை வாகனத்திற்கு தீ வைத்த சென்றாயன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.