வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கலைஞர் நகரில் வசித்து வருபவர் குமரேசன்(35). அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் சூர்யா(20). இவர்கள் இருவரும் திருப்பத்தூர் பஜார் கடை வீதியில் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நேற்று இருவரும் தங்களது சம்பளத்தை பங்கு பிரிக்கும்போது இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சூர்யா சுமை தூக்க பயன்படுத்தப்படும் கம்பியால் குமரேசனின் தலையில் தாக்கியதால் நிலை குலைந்த அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து குமரேசனின் வயிற்றில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து, சூர்யா அங்கிருந்து தப்பித்துள்ளார். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த குமரேசனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துகொண்டிருந்த போது, குமரேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.