தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பால்பாண்டி (48). இவர் தனது தோட்டத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். கடந்த செப். 12ஆம் தேதி வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது அங்கிருந்த இருசக்கர வாகனம் காணாமல்போனது தெரியவந்தது.
மேலும் எங்கு தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காததால் இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில் க. விலக்கு காவல் துறையினர் அரப்படித்தேவன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த இளைஞர் தேனி அருகே கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன்(26) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் ஓட்டி வந்தது திருடுபோன பால்பாண்டியின் இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராமச்சந்திரனை காவல் துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.