விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது பூட்டி இருந்த வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நகை, பணம் போன்ற பொருட்கள் திருடு போயுள்ளன. இதனைத்தொடர்ந்து அவர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து புதன் கிழமை பெண் ஒருவர் மாலை நேரத்தில், நொளம்பூர் கிராமப்பகுதிக்கு மின் வாரியத்தில் பணியாற்றும் மின் கணக்காளர் போன்று வந்து, அங்குள்ள வீடுகளில் மின் கணக்கிட வந்ததாகச் சொல்லி வீடுகளுக்குள் சென்று திருடியுள்ளார்.
பின்னர் பக்கத்து தெருவுக்குச் சென்ற, அந்த பெண் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாகக் கூறி, குமார் என்பவரது வீட்டில் நுழைந்து 11 சவரன் நகைகளை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்ற போது சந்தேகமடைந்த கிராமத்தினர் பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர்.
இதில் அப்பெண் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கிராம மக்கள் ஒன்றுகூடி அந்தப் பெண்ணை சரமாரியாக தங்கள் கையில் கிடைத்த பொருட்களை வைத்து தாக்கினர். இதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்தார்.
இதனையடுத்து ஒலக்கூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்த கல்பனா(36) என்பது தெரியவந்தது.
அந்தப் பெண்ணிடம் இருந்து 12 சவரன் தங்க நகைகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். நொளம்பூர் கிராம மக்கள் நூதன முறையில் திருடிய பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க :ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வீட்டு உரிமையாளர் - அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை