நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் ஆதவன் நகரில் வசித்து வருபவர் குமார்(43). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி(38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குமாருக்கும், தனலெட்சுமிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்ட நிலையில் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் காவல் துறையினர் சமாதானம் செய்து வைத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று(அக்.29) மதியம் மீன் விற்பனைக்காக குமார் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த குமார் வீட்டிலிருந்த மீன் வெட்டும் அரிவாளை எடுத்து மனைவியை ஓட ஓட இரண்டு கைகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். தனலெட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தனலட்சுமியை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் காவல் துறையினர், அரிவாளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து மனைவி மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவான கணவர் குமாரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெங்காயத்தால் முட்டைகோஸுக்கு வந்த வாழ்வு!