நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக பிரச்னைகள் சார்ந்த பல்வேறு விஷயங்களில் வழக்கு தொடர்ந்து வருகிறார். அண்மையில், நெல்லை மாவட்ட அரசு மருத்துவனையில் கரோனா நோயாளிகளுக்கு உணவுக்காக எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது. உயிரிழந்த நபர்களின் பட்டியல் எவ்வளவு உள்ளி்ட்ட விவரங்களை கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், வழக்கறிஞர் பிரம்மா இன்று பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள மதுரம் என்ற தனியார் ஹோட்டலுக்கு சென்றபோது அவரை ஓட்டல் நிர்வாகிகள் ஹோட்டலுக்குள் பூட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்
இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் பிரம்மாவை மதுரம் ஓட்டல் நிர்வாகி ஹரி (சிகப்பு டீசட் அணிந்துள்ளவர்) காலில் உதைப்பது போன்றும் மற்றொரு நிர்வாகி கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனையறிந்த நெல்லை மாவட்ட வழக்கறிஞர் 100க்கும் மேற்பட்டோர் ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஓட்டல் நிர்வாகி ஹரி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் பிரம்மா சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தின் மீது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளதாகவும் அது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பெண்கள் குறித்து இழிவான பேச்சு - திருமாவளவன் மீது வழக்குப்பதிவு