தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையம் ஆகியன கரந்தை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஒருவாரமாக தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பூண்டியிலிருந்து தஞ்சை தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்தில் மணக்கரம்பையில் ஏறிய பெண் பயணி ஒருவர் கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்குவதற்கு பயணச்சீட்டு எடுத்துள்ளார்.
பேருந்தை அங்கு நிறுத்தும்போது மற்ற பயணிகள் இறங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தார். பேருந்து அங்கிருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் அந்தப் பெண், "நான் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு இறங்குவதற்குதான் பயணச்சீட்டு எடுத்தேன். நான் தூங்கினாலும், என்னை எழுப்பி இறக்கிவிட்டு இருக்க வேண்டும்" எனச் சொல்லியுள்ளார். இது தொடர்பாக ஓட்டுநருக்கும் அந்தப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெண் பயணி தாக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் ஓட்டுநரை நோக்கி காலணியை கழற்றி காட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில் பேருந்து நிலையத்திற்கு வந்த மற்ற ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பேருந்தை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தஞ்சை மேற்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பெண் பயணி காலணியை கழற்றி அடித்ததாக ஓட்டுநரும், சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதால் தான் காலணியை கழற்றி காண்பித்ததாகவும் அந்தப் பெண்ணும் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.