தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளிநாயகம்(52), ஊர் நாட்டாமையாக இருந்துள்ளார். இந்நிலையில் ஊரில் பொங்கல் தினத்தன்று வாருகாலில் தண்ணீர் செல்வது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பெண்ணிற்கு அறிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து கிராமத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஊர் நாட்டாமை வள்ளிநாயகத்திடம் காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அவர் யார்? யார்? இந்த பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர் என பெயர் விவரங்களை காவல் துறையினரிடம் தந்ததாக தெரிகிறது.
இதனிடையே, வள்ளிநாயகம் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று முன்தினம் (ஜன. 18) இரவு குன்னக்குடி பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நேற்று (ஜன. 19) காலையில் செந்தட்டியாபுரம் மக்களுக்கு தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்(22), மலர்மன்னன்(22), பிரவின்குமார்(19) ஆகிய மூன்று பேர்களும் சாத்தூர் நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் சரணடைந்தனர். பின்னர் நீதிபதி அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்