சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(27). இவருக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த ஆசிரியரான கலைவாணி (27) என்பவருடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 35 சவரன் நகை, 2.5லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் மற்றும் மோகனுக்கு இரண்டு லட்சம் ரொக்கம், 5 சவரன் நகையை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.
ஆசிரியர் தற்கொலை
இந்நிலையில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கலைவாணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கிண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். திருமணம் நடந்து மூன்று வருடங்களில் கலைவாணி உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணை நடத்தி வந்தனர்.
கலைவாணியின் தற்கொலைக்கு காரணம் கணவர் மோகன், அவரது தாய் கலா, தந்தை சாந்தகுமார் மற்றும் தங்கை ஜோதிலட்சுமி ஆகியோர் கொடுமைப் படுத்தி வரதட்சணை கேட்டு வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினர்.
ஆசிரியரின் தந்தை புகார்
தொடர்ந்து கலைவாணியின் தந்தை சுப்பிரமணி கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திருமணமான 4 மாதத்திற்கு பிறகு கலைவாணியை அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மிரட்டியதாகவும், கலைவாணி தன்னிடம் கூறியதால் தொடர்ந்து பணத்தை செலுத்தி பிரச்னையை சரிசெய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்த பிறகும் தனது மகளிடம் பணம் மற்றும் நிலத்தை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இந்தச் சூழலில் கடந்த 19ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
கணவர் கைது
இதுகுறித்து மோகனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கலைவாணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது நிரூபணமாகியுள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் மோகனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!