இது தொடர்பாக, அனைத்து சிறைத் துறை அலுவலர்களுக்கும் சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறைப் பணியாளர்கள், சிறைவாசிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பல்வேறு வசதிகளைச் செய்துதருவதாகத் தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக ரவுடிகள் சிறையின் சுவரைத் தாண்டி தப்பித்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட உதவிபுரிவதாகவும், சிறை அலுவலர்கள் சிலர் ஊடகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சிறை நிர்வாகம் தொடர்பான தகவல்களைத் தெரிவித்துவருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சிறை மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் செவிலியர், சிறையில் உள்ள மருந்துகளை மருத்துவரின் மருந்தகத்திற்கு கடத்துவதாகவும் தெரியவந்துள்ளது. மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஒருவர் சிறைவாசிகளின் உறவினர்களைத் தனது குடும்பப் பணிகளுக்காக ஈடுபட வைத்ததும், முதல்நிலை காவலர் ஒருவர் ஜாதியின் அடிப்படையில் செயல்பட்டுவருவதும் தெரியவந்துள்ளது.
கிளை சிறைக் கண்காணிப்பாளர், முதல் நிலை காவலர் பணம் பெற்றுக்கொண்டு விடுமுறை நாள்களிலும் சிறைவாசிகளை நேர்காணலுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
மத்தியச் சிறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர், சிறைவாசிகளின் மனைவியிடம் உறவு வைத்திருப்பதாகவும், சிறைவாசிகளிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு போதைப் பொருள்கள், செல்போன்கள், வெளி உணவுகள் உண்பதற்கு அனுமதி அளித்துவருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிணை கொடுத்த பின்பும் கையூட்டாகப் பணம் பெறுவதும், சிறைக்குப் புறம்பான பொருள்களைக் கண்டெடுத்த பின்னரும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றம்செய்துவிட்டுவரும் சிறைவாசிகள் மனம் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட சிறைச்சாலையில், மேலும் குற்றங்கள் செய்ய வழிவகை செய்யாமல் தடுக்க வேண்டும் என சிறைத் துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் கனகராஜ் அனைத்து சிறைத் துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஆம்பூரில் லாட்டரி விற்றவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்