திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகேயுள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ்(28).இவர் கோயம்புத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த உமா(24) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரில் இருந்த நாகராஜ் மீண்டும் பணியில் சேர்வதற்காக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் கிளம்பியுள்ளார். அப்போது மனைவி உமாவை அவரது அம்மா வீடான மஞ்சம்பட்டியில் விட்டுச்சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் சோர்வாக இருந்த உமா, எலி மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இதை அறியாத அவரது பெற்றோர், சோர்வாக இருந்த உமாவை மணப்பாறை - மதுரை சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் தனது மகள் இறப்பிற்கு, நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மணப்பாறை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபிஆதித்யா விசாரணை மேற்கொண்டுள்ளார்.