நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி ஊராட்சியைச் சேர்ந்தவர் பங்கஜம் (வயது 60). கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பங்கஜத்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகன் பிரகாஷுக்கும் பங்கஜத்திற்கும் சில நாள்களாக சொத்து தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் (செப்.22) இரவு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பான தகராறு எழுந்துள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரகாஷ், தனது தாயை இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த பங்கஜம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பிரகாஷின் மனைவி முத்துலட்சுமி, பங்கஜம் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், இது குறித்து வெளியே கூறினால் உன்னையும் கொலை செய்து விடுவேன் என தனது மனைவியை மிரட்டிய பிரகாஷ், உயிரிழந்த பங்கஜத்தின் உடலை தனது வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெற்ற மகனே சொத்துக்காக தாயைக் கொன்று எரித்து சாம்பலாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.