சென்னை விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்ததையடுத்து, அவர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, துபாயில் இருந்து சென்னை வந்த ஜெனித்தா (40) என்ற பெண் பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜெனித்தாவின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் ஏதும் இல்லை. பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 34 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான 804 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் இலங்கையிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சோ்ந்த முகமது அகில் (23), அர்சத் (28), அப்சல் (26) ஆகியோரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதித்ததில் உள்ளாடை மற்றும் உடலுக்குள் மறைத்துக் கடத்தி வந்த 56 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஒரு கிலோ 292 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் நான்கு பேரிடமிருந்தும் 91 லட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விசாரணைக் கைதி தப்பியோட்டம்