விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஹ்மத் அலி (42), முகமது அப்துல்லா (27) ஆகியோர் வந்தனர்.
இவர்களை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்க சங்கலி மற்றும் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர், இருவரிடம் இருந்தும் ரூ. 28.6 லட்சம் மதிப்புள்ள 721 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதேபோல், சென்னையில் இருந்து துபாய்க்குச் சென்ற விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஜின்னா (30) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறையினர் நிறுத்தி விசாரித்தபோது, இவரது உடமைகளில் சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். பின்னர், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளைக் கைப்பற்றினார்கள்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவை எங்கிருந்து எங்கு செல்கிறது, இதில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பன குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விமான பயணிகளின் கடத்தல் சேட்டை: சுங்கத் துறையினரின் அதிரடி வேட்டை!