சென்னை: துணை நடிகைக்கு சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபர் யார் என்று சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த துணை நடிகையும், தொலைக்காட்சி தொடர் நடிகையுமான ஒருவர், அக்டோபர் 9ஆம் தேதியன்று முகநூலில் சுப்ரீம் மாடல் என்ற வலைதள பக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு இளம் நடிகைகள் தேவை என்ற விளம்பரத்தை கண்டு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த நபர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு ஒருங்கிணைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, முழு விவரத்தையும் கேட்டுள்ளார். தொடர்ந்து தனது படத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும் அரை நிர்வாண புகைப்படத்தை அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு துணை நடிகை மறுப்பு தெரிவித்து ‘சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்’ என கோபமாக பேசிய ஒலிப்பதிவு ஒன்றை அந்நபருக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து, துணை நடிகையைத் தொடர்பு கொண்ட நபர், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சுரேஷ் பேசுவதாகக் கூறி, ‘சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறித்து தவறாக பேசி அவதூறு பரப்புகிறாயா’ என்று கூறி ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும், தனக்கு உதயநிதி ஸ்டாலினின் மேலாளர் நன்கு தெரியும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க சன் பிக்சர்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற அவரை குண்டர்கள் 10 பேர் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி இவரை துரத்திவிட்டதாக தனது புகாரில் துணை நடிகை குறிப்பிட்டுள்ளார். இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவத்தின் பெயரை பயன்படுத்தி, பாலியல் தொல்லை கொடுத்த நபர், மிரட்டல் விடுத்த மேலாளர் சுரேஷ் ஆகியோரை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளளார் துணை நடிகை.
இச்சூழலில், சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்களிடம் தவறாக பேசுவதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் புகாரளித்துள்ளனர். இந்த இரு புகார்கள் தொடர்பாகவும் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.