ரயில் நிலையங்களில் முகத்தில் துணி அணிந்து கொண்டு பெண் ஒருவர் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு இளம்பெண் முகத்தில் துணி கட்டிகொண்டு மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் சாதாரண பயணி போல் ஏறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது. இது எழும்பூர், பூங்கா, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.
பின்னர், சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த அதே பெண் போல் முகத்தில் துணி கட்டி கொண்டு இன்று பூங்கா ரயில் நிலையத்தில் ஒரு பெண் செல்லும் போது காவலர் ஒருவர் தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறை, அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியது. இதில் அந்த பெண் ஜோலார்பேட்டைப் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி தேவி (24) என்பதும், இவள் இதே போன்று பல குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து தேவியை கைது செய்த காவல் துறையினர் அந்த பெண்ணிடமிருந்து சுமார் 20 சவரன் நகை, ரூபாய் 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையினர் தேவியிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த சுமார் 70 சவரன் நகை, ரூ. 77 ஆயிரத்து 500 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இவர் மீது எழும்பூர்,திருவான்மியூர்,மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் சுமார் 57 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிட்டதக்கது.
இதையும் படிங்க...மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!