நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் வந்த கொரியா் பாா்சல்களை ஆய்வு செய்த சுங்கத் துறையினா், சென்னையின் இருவேறு முகவரிகளுக்கு வந்திருந்த 2 மருத்துவ பாா்சல்கள் மீது சந்தேகமடைந்து, அதனை சோதனை செய்தனர்.
சோதனையில், அதனுள் எல்.எஸ்.டி ரக போதை ஸ்டாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஸ்டாம்புகள் போதை திரவத்தைக் கொண்டவை என்றும், இதனை மிட்டாய் போல உபயோகிக்க முடியும் என்றும், சென்னையில் முதல் முறையாக இந்த ஸ்டாம்புகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சுங்கத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் மற்றொரு பாா்சலில் பெத்தமின் ரக போதை மாத்திரைகள், மற்றும் 14 கிராம் போதை பவுடர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதனைப் பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக சென்னையில் வெவ்வேறு பகுதியை சோ்ந்த இருவரைக் கைது செய்த சுங்கத் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.