மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதி வழியாக அடிக்கடி கஞ்சா கடத்திவருவதாக திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி தலைமையிலான தனிப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் நாவார்பட்டி எனும் இடத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகப்படும்படியாக வந்த காரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது காரில் பண்டல் பண்டலாக கஞ்சா கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், காரில் இருந்த நாவார்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார், வகுரணியைச் சேர்ந்த ராகவன் என்ற இருவரை கைதுசெய்து முதற்கட்ட விசாரணை நடத்தியதில் இவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாகவும் உசிலம்பட்டி பகுதியில் விற்பனை செய்ய கொண்டுவந்ததாகவும் கூறியுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 58 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்த காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல்செய்து சிந்துபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிந்துபட்டி காவல் நிலைய காவல் துறையினர் கஞ்சா கடத்திவந்த சசிக்குமார், ராகவன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.