சென்னை திருவேற்காடு அருகேயுள்ள சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் தி. நகரில் உள்ள எலைட் சரவணா தங்க நகைக்கடையில் கடந்த 3ஆம் தேதி பழைய தங்க நாணயங்கள் கொடுத்து மூன்று சவரன் செயின் வாங்கி உள்ளார் . மேலும் அந்த நகையில் மாவு போன்ற பொருள் தடவி தந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நகையை வாங்கிக் கொண்டு சென்ற தனசேகர் அடுத்த ஒரு மணி நேரத்தில் திரும்பி அதே கடைக்கு வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனசேகர் திருப்பிக் கொண்டு வந்த நகையை வியாபாரம் செய்த நிறுவனத்தின் ஊழியரிடம் காண்பித்து தான் வாங்கிய மூன்று சவரன் செயின் போலியானது என்றும் இதற்கு இழப்பீடு வழங்கக் வேண்டும் எனவும் வாக்குவாதம் நடத்தியுள்ளார். மேலும், தனியார் பத்திரிகை நிறுவனத்தின் அதிகாரியாக இருக்கும் தனசேகர் உங்கள் கடையில் போலி நகைகளை விற்பதாக எங்கள் ஊடகத்தில் எழுதி அசிங்கப்படுத்துவோம் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தனசேகர் வெளியில் சொல்லாமல் இருக்க ஊழியர்களிடம் 15 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதற்கு ஊழியர்களும் தனசேகரின் மிரட்டலுக்கு அஞ்சி அவர் கேட்ட 15 லட்சம் ரூபாயை உடனடியாக அவருக்கு கொடுத்துள்ளனர். அதன்பின்பே தனசேகர் பதினைந்து நபர்களுடன் அந்த எலைட் சரவணா ஸ்டோர் நகை கடைக்கு பலமுறை சென்று மிரட்டி வந்துள்ளார்.
அதேபோல் இன்றும் தனசேகரன் தன்னுடன் 15 நபர்களை அழைத்துக்கொண்டு அந்த நகை கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று இது குறித்து வெளியில் சொல்லாமல் இருக்க எங்களுக்கு மேலும் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என மிரட்டியுள்ளார்.
மிரட்டலைத் தொடர்ந்து தங்க நகை கடையின் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தி. நகர் காவல் துறையினர் வடபழனி பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமலை, தனியார் கணக்கு பதிவாளர் சையத் அபுதகர், டிரைவர் தண்டபாணி ஆகிய ஒன்பது பேரை கைது செய்தனர் .
இதனையடுத்து தனசேகர் தரப்பினர், சரவணா ஸ்டோர் நகை கடை போக்கை கண்டித்து நாங்கள் புகார் கொடுக்க வந்ததாகவும் ஆனால் காவல்துறையினர் நகைக்கடையினரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அந்த புகாரை ஏற்க மறுத்து விட்டு இத்தகைய கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டினர்.
இதில் பிடிபட்ட தனசேகரிடமிருந்து போலியான காவல்துறை அடையாள அட்டை, வெவ்வேறு ஊடகம் சார்ந்த நான்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட சில ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தனசேகனுடன் வந்த அதிமுக உறுப்பினர் ஜீவா கொண்டுவந்த ஏர்கன், துப்பாக்கி உள்பட அந்த கும்பல் பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க...கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு!