பெங்களூரில் ஐ.எம்.ஏ நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட மன்சூர் கான் என்பவர் டெல்லியில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் 15க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சேலத்தை பூர்வீகமாக கொண்ட வருமான வரித்துறை உதவி ஆணையராக பெங்களூருவில் பணியாற்றி வரும் குமார் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக மன்சூர் கான் கூறியதை தொடர்ந்து, பெங்களூரில் உள்ள குமார் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இதன்தொடர்ச்சியாக, சேலம் அழகாபுரத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலர் குமாருக்கு சொந்தமான வீட்டில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை நான்கு பேர் கொண்ட சிபிஐ அலுவலர்கள், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் பார்க்க : தொழிலதிபர் வீட்டில் சிபிஐ ரெய்டு: வங்கி மோசடியில் திடீர் திருப்பம்