சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர், அண்ணா சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இதையடுத்து பொது முடக்கத்தால் வியாபாரம் இல்லாமல் நஷ்டத்தில் இருந்து வந்த அவர், கடந்த மூன்று நாள்களாக ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (செப். 5) இரவு வியாபாரம் முடிந்து கடையை மூடிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை (செப். 6) கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு, ஷெட்டர் பாதியில் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த கொடுங்கையூர் காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த மூன்று நாள்களாக வியாபாரம் செய்த ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை வேல்முருகன் கல்லாப்பெட்டியில் வைத்திருந்தார். இந்தப் பணத்தை மொத்தமாகக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது வியாபாரிகள் தங்களது தொழிலை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்று கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்போன் பறித்துவிட்டு தப்பியோடிய கொள்ளையன்: மடக்கிப்பிடித்த எஸ்ஐ!