திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை குடோனில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 36 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் முறைப்படி பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களை திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இவற்றின் மதிப்பு 12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த குடோன் பெருமாள்புரத்தைச் சேர்ந்த டேவிட் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதற்கிடையில், போதை பொருள்களின் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை முடிவில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.