சென்னை அண்ணா நகர் அருகே உள்ள பாடி புது நகர் 18ஆவது தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (57). கிண்டியில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருகிறார். இவரது மகள் பிரியதர்சினிக்கும் அய்யப்பந்தாங்களைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெறவுள்ளது.
இதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு பூவிருந்தவல்லி, குமணன்சாவடியில் உள்ள ஈவிபி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு மணப்பெண் அறைக்குச் சென்று பார்த்தபோது, அறையில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதனால் மண்டபத்தில் இருந்த பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மணப்பெண் அறையில் சோதனை செய்தபோது, கீழ் ட்ராவில் சுமார் 45 சவரன் வரை நகை இருப்பது தெரியவந்தது. கீழ் ட்ராவில் நகை இருப்பது தெரியாததால் 50 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் கையில் இருந்து தப்பியது.
பின்னர் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மணப்பெண் அறையில் உள்ள நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பூவிருந்தவல்லி காவல் துறையினர் 50 சவரன் நகையை கொள்ளை அடித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பா?