திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அருகே உள்ள சக்திநகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் அதே பகுதியில் அரிசிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் காலையில் வந்து கடையைத் திறந்துள்ளார்.
அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 3000 ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சுரேஷ்குமார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.