கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனுக்கு சாகும்வரை தூக்கு - தேனி நீதிமன்றம் உத்தரவு! - தேனி மாவட்ட குற்றச் செய்திகள்
கர்ப்பிணி மனைவியை கொலை செய்த அதிமுகவின் முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் (36). அதிமுக பிரமுகரான இவர், கடந்த 2011 - 16ஆம் ஆண்டு வரை ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். இவருக்கு கற்பகவள்ளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, திவ்யா சுந்தரி, சுந்தரி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கற்பகவள்ளி மூன்றாவதாக கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுரேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, தனது வீட்டிலிருந்த கற்பகவள்ளியை தாக்கி மார்பு பகுதியில் சிகரெட்டால் சூடு வைத்தார். தொடர்ந்து வயிறு மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் பலமாக தாக்கினார். இதில், 6 மாத கரு கலைந்தது. இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கற்பகம் மயக்கமடைந்தார். இதையடுத்து, தாலிக்கயிறால், கற்பகத்தின் கழுத்தை நெரித்த சுரேஷ், கற்பகம் தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடி அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் கற்பகவள்ளி உயிரிழந்தார். உடற்கூராய்வு தகவலில், கற்பகவள்ளி, தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், வயிற்றில் இருந்த 6 மாத கரு சிதைந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பேரூராட்சி தலைவராக இருந்த சுரேசை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று (டிச.14) நடைபெற்றது. விசாரணையின் முடிவில், சுரேஷ் குற்றவாளி என நீதிபதி அப்துல்காதர் உறுதி செய்தார்.
தொடர்ந்து, கர்ப்பிணி மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக, சுரேஷை சாகும் வரை தூக்கில் இட வேண்டும் என்றும், கருச்சிதைவு செய்ததற்காக மேலும் 10 வருட சிறை தண்டனை, ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் பாமக நிர்வாகி உயிரிழப்பு