திருவள்ளூர் : புழல் காவாங்கரை மகாவீர் கார்டன் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப் (38). இவர் நேற்றிரவு(அக்.9) தனது நண்பர் முனுசாமி என்பவருடன் புழல் திருநீலகண்ட நகர் 4வது தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த, அதே பகுதியைச் சேர்ந்த கோபி (27) என்பவர், பிரதீப்பை பார்த்ததும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறியது.
சண்டையில் கோபி தாக்கியதால் பிரதீப்பின் முன்பக்க பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இருந்தும் கோபம் தணியாத கோபி, பிரதீப்பின் வலது கை ஆள்காட்டி விரலையும் கடித்து துப்பினார். பலத்த காயமுற்ற பிரதீப்பை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரதீப் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த புழல் காவல் துறையினர் கோபியின் சகோதரர்களான சத்யநாராயணன், பிரேம் விஸ்வரூப், உறவினர் கௌரிசங்கர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கோபியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : கத்தியை காட்டி வழிப்பறி - 3 இளைஞர்கள் கைது