சிவகங்கை மாவட்டம் தாணிச்சாவூரணியில் ராஜபாண்டி என்பவர் மீது கடந்த 21ஆம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடிய விஜயகுமார், மதிபாலா, முத்துராமலிங்கம் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி தருமபுரி அருகே உள்ள தொப்பூர் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அவர்களை காவல் துறையினர், பிடிக்கச் சென்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகள் 3 பேரும், சேலத்தில் அவர்களது நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று (ஜூலை29) அதிகாலை சேலம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனி பகுதியில் பதுங்கியிருந்த விஜயகுமார், மதிபாலா, முத்துராமலிங்கம் ஆகிய மூன்று பேரையும் தனிப்படை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றனர்.
இதில் 3 பேரும் மாடியில் இருந்து குதித்த போது, அருகே இருந்த சாக்கடையில் விழுந்து இருவருக்கு முதுகெலும்பு முறிவும், மற்றொருவருக்கு கைகளில் காயமும் ஏற்பட்டது.
அவர்களை உடனே மடக்கிப் பிடித்த தனிப்படை காவல் துறையினர் மூன்று பேரையும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சைப் பெற்று வரும் மூவரும் பலமுறை தப்பியோடிவர்கள் என்பதால் சேலம் அரசு மருத்துமனையில் பலத்த காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.