சென்னை பாண்டிபஜார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துகிடமாக இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற இருவரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் ஒரு அடி நீள கத்தி இருந்தது தெரியவந்தது.
மேலும், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர்கள் விக்னேஷ்(22), முகமது ஆரூன்(20) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தாங்கள் ஜுமாடோ நிறுவனத்தில் டெலிவரிமேனாக பணி புரிவதாகவும், நேற்று உணவு டெலிவரி செய்வதற்காக பென்ஸ் பார்க் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நான்கு பேர், செங்கலை கொண்டு தாக்கி தங்களிடம் உணவு பறிப்பில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.