வில்லிவாக்கம் திருநகர் பகுதியை சேர்ந்த முதியவரான லஷ்மணன் (74), நாதமுனி திரையரங்கு சாலையிலுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் பணம் வராத நிலையில், அங்கு வந்த ஹெல்மெட் அணிந்த ஒருவர் லஷ்மணனிடம் உதவுவதாக கூறி பணம் எடுத்து கொடுத்துள்ளார். மேலும் எங்கு செல்லவேண்டும் எனக்கேட்டு முதியவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டுள்ளார்.
பின்னர், வீட்டிற்குள் வந்த லஷ்மணன், ஏடிஎம்மில் எடுத்த 12 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போயுள்ளார். இதையடுத்து உதவுவதாக வந்த நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் லஷ்மணன் புகாரளித்த நிலையில், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
![கைதான பார்த்தசாரதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8931242_274_8931242_1601020819966.png)
அதில், இரு சக்கர வாகன பதிவெண்ணை வைத்து, இது பழைய குற்றவாளி பார்த்தசாரதியின் கைவரிசை என்பதை கண்டுபிடித்த காவல் துறையினர், தியாகராயர் நகர் பகுதியில் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதே பாணியில் திருடியதாக பார்த்தசாரதி மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 7 வழக்குகள் உள்ளன.
வயதானவர்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளுக்கு செல்லும் பொழுது, தெரியாத நபர்களிடம் ரகசிய குறியீட்டு எண்ணை கொடுக்க கூடாது எனவும், உதவுவது போல நடிக்கும் இது போன்ற மோசடி பேர் வழிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 100 கிலோ குட்கா காரில் கடத்தல் - இருவர் கைது