திருவள்ளூர்: மாவட்ட பாமக இளைஞரணிச் செயலாளர் விபத்தில் இறப்பதற்கு காரணமான தனியார் பேருந்தை ஊர் மக்கள் கூடி, அடித்து உடைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பட்டாபிராம், அமுதூர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (45). பாமகவின் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவர், பட்டாபிராம் அணைக்கட்டுச்சேரி பகுதியிலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இவரது இருசக்கர வாகனம், வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் அணுகு சாலை அருகேயுள்ள அமூதூர்மேடு புற்று கோயில் பகுதியில் சென்றபோது, தனியார் நிறுவன பேருந்து மோதியது.
இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உருட்டுக்கட்டையால் பேருந்து கண்ணாடியை உடைத்து தீயிட்டுக் கொளுத்தினர்.
இதில் பேருந்து தீயில் இருந்து முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து பட்டாபிராம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.