மதமாற்றம் செய்வதாகக் கூறி கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனத்தில், பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதில் காரைக்காலைச் சேர்ந்த குத்தூஸ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தூஸ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பா.ஃப்.இ.) அமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வு முகமை மேற்கொண்டுள்ளது. கேரளாவிலிருந்து தேசியப் புலனாய்வு முகமை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஐவர் குழு இன்று அதிகாலை நான்கு மணிக்கு காரைக்கால் வந்தது.
அவர்கள், காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள குத்தூஸ் என்பவரின் வீட்டில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக விசாரணையை மேற்கொண்டனர். பின்னர், பா.ஃப்.இ. நாகப்பட்டினம் மாவட்ட அலுவலகத்துக்குச் சென்ற தேசிய புலனாய்வு முகமை, அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை செய்தது. அந்த அலுவலகத்தில் வழக்குகள் சம்பந்தப்பட்ட தடயங்களை அலுவலர்கள் சேகரித்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், இந்த அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை காரைக்காலில் விசாரணை மேற்கொண்டு வருவதால், அவ்விடங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.