திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரம் அடுத்த பிள்ளையார் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுபாஷ் ஆனந்த். இவர் கடந்த 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள மருந்துவாழ் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் வெளியானது.
அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறையினர், காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், காதல் தோல்வியில் மனம் உடைந்து சுபாஷ் ஆனந்த் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது.
மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட கணக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுபாஷ் ஆனந்தின் உடற்கூராய்வு முடிந்த பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்னர், சுபாஷ் ஆனந்தின் செல்போனை குடும்பத்தினர் ஆராய்ந்தபோது குறிப்பிட்ட இரண்டு செல்போன் எண்களில் பல மணி நேரம் மூன்று மாதங்களுக்கு மேலாக அவர் பேசி இருப்பது தெரியவந்தது.
குறிப்பிட்ட அந்த எண் அவர்களது உறவினரான மல்லிகாவின் தொலைபேசி எண் என்பது தெரியவந்தது.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தும், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்குப் பதிலாக கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சுபாஷ் ஆனந்தின் சகோதரியை மிரட்டியதாக தாயார் வசந்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனேவே காவல் துறையினர் மிரட்டியதால் ஏற்பட்ட மனவேதனையில் சுபாஷ் ஆனந்தின் சகோதரி, சுனிதா கடந்த மாதம் 25ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, சுபாஷ் ஆனந்தின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தாயார் வசந்தி தனது மகளுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்துள்ளார்.
மரணத்துக்காக நியாயம் கேட்டு போராடி வரும் தங்களுக்கு காவல் துறை உள்ளிட்டோரின் அச்சுறுத்தல் உள்ளதால், தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும் தனது மகனின் மரணத்திற்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.