சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் நவீன். இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மனிதவளத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் முகநூல் மூலம் அறிமுகமான பெண் ஒருவர் கூறியதன் பேரில் ’Viber App’ எனும் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன்வழியாக அந்த பெண்ணுடன் உரையாடியபோது, திரையில் அரைகுறை ஆடையுடன் அவர் தோன்றியுள்ளார். நவீனும் அப்பெண் கூறியபடியே ஆடைகளை களைந்துவிட்டு திரையில் தோன்றியுள்ளார்.
பின்னர் அதனை பதிவு செய்து கொண்ட அந்தப்பெண், அதை வைத்து நவீனை மிரட்டியுள்ளார். தான் கூறும் எண்ணுக்கு 1000 யூரோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பிற்கு 80,000 ரூபாய் அனுப்ப வேண்டும் என்றும், இல்லை என்றால் நவீனின் உறவினர்களுக்கு திரைக்காட்சிகளை அனுப்பப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதில் பயந்துபோன நவீனும் 80,000 ரூபாய் பணத்தை அப்பெண் கூறிய எண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், மீண்டும் பணம் அனுப்பக்கூறி அப்பெண் அவரை தொந்தரவு செய்ததை அடுத்து, தி.நகர் துணை ஆணையரிடம் நவீன் புகாரளித்துள்ளார். அப்புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாண்டி பஜார் காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை மணம் முடித்து பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது போக்சோ!