தஞ்சாவூரிலுள்ள கலைஞர் நகர் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் திருப்பூர் சிக்கண்ணா கலை கல்லூரி பின்புறமுள்ள காமாட்சிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை குளத்தூர் நாயக்கர்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த்(27). திருப்பூரில் தங்கி, பின்னலாடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் கட்டிங் யூனிட் வைத்து நடத்தி வருகிறார்.
தொழில்ரீதியாக மூர்த்தி,அரவிந்திற்கு இடையே சில நாள்களுக்கு முன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் இணைந்து தொழில் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, மூர்த்தி, அரவிந்த் இருவரும் இணைந்து கடந்த ஜனவரி 1ஆம் தேதி திருப்பூர் ரங்கநாதபுரம் 3வது வீதியில், எஸ்.எம். பாலி பேக்ஸ் என்ற பெயரில் பின்னலாடை தொடர்பான நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தை தொடங்க அரவிந்த் பணமுதலீடு அளித்துள்ளார். மூர்த்தி பணம் எதுவும் கொடுக்கவில்லை என தெரிகிறது. நிறுவனம் தொடங்கி ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், லாப-நஷ்ட கணக்கு காட்டவில்லை என இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று (பிப். 9) இரவு அரவிந்த், பணி செய்யும் தொழிலாளர்கள் இருவர் நிறுவனத்தில் இருந்துள்ளனர். அப்போது மூர்த்தி தனது நண்பர் ஒருவருடன் அங்கு வந்துள்ளார்.
அப்போது அரவிந்த் மற்றும் மூர்த்தி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், "உனது பணத்தை தூக்கி எறிகிறேன், எடுத்து செல்" என மூர்த்தி பேசியதால், ஆத்திரமடைந்த அரவிந்த் கத்தியை எடுத்து மூர்த்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் தலைமையிலான காவல்துறையினர், மூர்த்தியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், கொலை வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மது அருந்தியபோது இரண்டு ரவுடிகள் வெட்டி கொலை!