திருவள்ளூர்: ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த கோலப்பஞ்சேரி பகுதியில் திருப்பூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தங்கி, மரப்பட்டறையில் வேலை செய்துவந்தார். இச்சூழலில், நண்பர்களுடன் கோலப்பஞ்சேரி ஏரியில் குளித்தபோது, நீச்சல் தெரியாததால் சேற்றில் சிக்கிக் கொண்டார்.
உடனடியாக அவருடன் சென்றவர்கள் நீரில் இருந்து வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் தேவராஜன் தலைமையில், அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர், படகு, கயிறு ஆகியவற்றின் மூலம் சேற்றில் சிக்கியவரை தேடினர். மூன்று மணி நேர தொடர் தேடுதலுக்குப் பின்பு சேற்றில் சிக்கி இருந்த அருண்குமாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளவேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.