கன்னியாகுமரி: நாகர்கோவில் சிறைச்சாலையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு காசி மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் பழகி அவர்களை காதலிப்பதுபோல் நடித்து பாலியல் வன்புணர்வு செய்ததுடன் ஆபாச காணொலிகள் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசி மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி, காசியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தது. அதன்படி காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட காணொலிகள், புகைப்படங்களை எடுப்பதற்காக எந்தெந்த ஐடியில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்பதைக் கண்டறியும் வகையிலும் சைபர் கிரைம் சிறப்புக் குழு ஆய்வு செய்தது.
இதற்கிடையில் கரோனா பாதிப்பு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகர்கோவில் சிறைக்கு காசி மாற்றப்பட்டார். இச்சூழலில் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையிலிருந்து மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு காசி மாற்றப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் நாகர்கோவில் சிறைச்சாலை காவலர்களுக்கும் காசிக்கும் இடையே ரகசிய கூட்டணி இருந்ததாகவும், காசிக்கு தேவையான பொருள்களை சிறைக் காவலர்கள் கொடுத்து வந்ததாகவும், அதற்கு ஈடாக பெரும் தொகையை காசியிடமிருந்து காவலர்கள் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் காசி மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக சிறைத்துறை காவல் உயர் அலுவலர்களிடம் விசாரித்தபோது, பாளையங்கோட்டை சிறையில் இருந்த காசி கரோனா பரவல் காரணமாக அங்கிருந்து நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இங்கு அவர் கடும் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இச்சூழலில் கரோனா பரவல் குறைந்ததை அடுத்து அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதில் வேறு எந்த ஒரு உள் விவகாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.