கடலூர் பாதிரிகுப்பம் திருவந்திபுரம் சாலையில் தாயாரம்மாள், அவரது சதோதரர் மனைவி பச்சையம்மாள் ஆகிய இருவரும் தனித்தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். பச்சையம்மாளுக்கு இரண்டு பெண்கள் உள்ள நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டு வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது உறவினரான சாந்தி என்பவர் தாயாரம்மாள், பச்சையம்மாளை பார்க்க இன்று (ஜனவரி 9) சென்றபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பச்சையம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மற்றொரு மூதாட்டியான தாயாரம்மாள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில், மூதாட்டிகள் இருவரின் காதுகளை அறுத்து அடையாளம் தெரியாத நபர்கள் தோடுகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பாப்புலியூர் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.