சென்னை: முன்னாள் நகர் மன்றத் தலைவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேற்காடு அடுத்த கோலடியைச் சேர்ந்தவர், மகேந்திரன். அதிமுகவைச் சேர்ந்த இவர் திருவேற்காடு முன்னாள் நகர் மன்றத் தலைவராக இருந்து வந்தார். இச்சூழலில் இரவு அருகிலுள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் லோடு ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் பின்னால் இடித்ததில் மகேந்திரன் நிலை தடுமாறி கீழேவிழுந்தார். பின்னர் அவர் எழுந்து பார்க்கும்போது ஆட்டோவிலிருந்து கையில் அரிவாளுடன் சிலர் இறங்கியுள்ளனர்.
இதை கண்டதும் மகேந்திரன் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால், ஆயுதங்களுடன் இருந்த நபர்கள், இவரை விடாமல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியதில் மகேந்திரனின் தலையில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது.
சிறிது தூரம் ஓடிய பின்னர், அங்கு அதிகளவில் கூடியிருந்த பொதுமக்களைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து தப்பியோடி வந்த மகேந்திரனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருவேற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.