சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் சர்க்கரை செட்டிப்பட்டி அடுத்த புதுக்கடை காலனி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா முருகன். இவரின் மகன் விஷ்ணுப்பிரியன். சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் .
இந்நிலையில் கடந்த மே மாதம் 8ஆம் தேதி சர்க்கரை செட்டிப்பட்டி பகுதியில் அவரது வீட்டின் முன்பு வேறொரு சமுதாய இளைஞர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 15 பேர் , ஓமலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவர முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து விஷ்ணுப்பிரியன் தாயார் வசந்தா முருகன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை8) மனு அளித்தார் .
அந்த மனுவில் "எனது மகனை கொலை செய்தவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் எங்களது உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது.
மேலும் அவர்கள் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சாட்சிகளை கலைக்கும் ஆபத்து உள்ளது . எனவே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 15 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநில பிரதிநிதி பாவேந்தன் கூறுகையில்," சாதி மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த இளைஞர்கள் 15 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசு எங்களை பாதுகாக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசாணையை கண்டித்து, முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மனு!