சேலம் அம்மாபேட்டையை அடுத்து சக்தி கைலாஷ் கல்லூரி சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 19ஆம் தேதி இரவு கோவிந்தராஜ் என்பவர் வேலைக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கொய்யா தோப்பு என்ற பகுதியில் வந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் வந்தனர்.
அவர்களில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து கோவிந்தராஜிடம் வீட்டு விலாசம் விசாரிப்பது போல் நடித்து தன் சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோவிந்தராஜை வெட்டிவிட்டு அவர் கையில் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதில் காயமடைந்த கோவிந்தராஜ் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, கைகளில் காயங்களைக் கண்ட காவல் துறையினர் கோவிந்தராஜை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற இரண்டு வாலிபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், கத்தியால் வெட்டி செல்ஃபோனை பறித்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.