கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி, இரவு ஆர்கேஸ்வரர் கோயிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மூன்று கோயில் பூசாரிகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர்.
அவர்களைக் கொன்ற பிறகு, கொள்ளையர்கள் நன்கொடைப் பெட்டியில் இருந்த நாணயத்தாள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த குற்றச்செயல்களில் மொத்தம் ஒன்பது பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று மத்தூர் அருகேயுள்ள பேருந்து நிலையத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐந்து பேரை மடக்கிய காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அந்தக் கும்பல் காவல் துறையினரைத் தாக்கி, அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
காவல் துறையினர் தாக்கப்பட்டதையடுத்து, அந்தக் கும்பல் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஐந்து பேரும் கால்களில் சுடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கில் தற்போது ஐந்து பேர் சிக்கியுள்ளதாகவும்; மேலும் தலைமறைவாகவுள்ள நான்கு பேர் குறித்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.