பொழிச்சலூரைச் சேர்ந்த கட்டுமான நிறுவன ஊழியரான சதீஷ்குமார், தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக சோழிங்கநல்லூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் அவரைத் தாக்கியதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அச்சத்தில் அங்கிருந்து ஓடிச்சென்ற சதீஷ்குமார் நடந்தவை குறித்து, தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனே அவரது நண்பர்கள் நிகழ்விடத்திற்கு சென்றபோது சதீஷை தாக்கிய மூன்று பேர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களை மடக்கிப் பிடித்தபோது, அதில் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.
பின்னர் அதில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல, சூர்யா என்பவரை மட்டும் பிடித்து சங்கர் நகர் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். சதீஷ்குமார் பலத்தக் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், சூர்யாவை கைதுசெய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து பொழிச்சலூரிலும் அதே போன்ற நிகழ்வு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேனாம்பேட்டை கார் ஷோரூம் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய இருவருக்கு காவல் துறை வலைவீச்சு!