ஆயிரம் விளக்கு பகுதியில் வாழ்ந்து வருபவர் சையத் அபீஸ் ரஸா. இவரது வீட்டில் புகுந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 26-ஆம் தேதி நள்ளிரவில் ஐந்து சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் சையத் அபீஸ் ரஸா புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மேகநாதன் (32) என்பது தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த மேகநாதனை, பாரதி சாலை பூங்காவில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதே போல் நள்ளிரவில் பல வீடுகளில் கொள்ளையடித்ததும், சையது அபீஸ் வீட்டில் கொள்ளையடித்த நகையை தி.நகரில் உள்ள ஒரு கடையில் விற்றதும் தெரியவந்தது.
மேகநாதன் மீது ஏற்கனவே தண்டையார்பேட்டை, அண்ணா சதுக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்ததையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குரோம்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது- 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்