தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (31) என்பவர் ஈச்சம்பட்டி கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் வசித்துவருகிறார். இவர் நகை அடகுக்கடை நடத்திவந்த நிலையில், தீபாவளிச் சீட்டும் நடத்திவந்துள்ளார்.
இவரிடம் ஈச்சம்பட்டி பகுதி மக்கள் மாதம்தோறும் 200 முதல் 300 ரூபாய் வரை பணம் கட்டிவந்தனர். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்குச் சீட்டு கட்டியவர்களுக்கு இனிப்புகள் வழங்கவில்லை, பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றினார். இது குறித்து பணம் கட்டியவர்கள் சிவக்குமாரிடம் கேட்டதற்கு உரிய பதிலளிக்காமல் தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான விஸ்வநாதன் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிவக்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுமார் 30 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சிவக்குமார் சில வருடங்களுக்கு முன்பு பாலக்கோடு பகுதியில் டியூசன் நடத்தி, பெண்களைத் தகாத காணொலி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது முறையாக விசாரணை நடத்தாத அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பார்த்திபன் என்பவரை, தருமபுரி ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புரவி புயல் டிச., 4 இல் கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்!